இந்தியாவில் ஒரு லட்சம் எம்.பி.பி.எஸ் இடங்கள்.. இலக்கை முன்கூட்டியே அடைந்த மோடி அரசு..
By : Bharathi Latha
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் 4-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான இடங்களை அதிகரித்ததற்காக இந்த ஆணையத்தை பாராட்டினார். நாட்டில் ஒரு லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் என்ற இலக்கை ஆணையம் ஓராண்டுக்கு முன்பே எட்டிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கும் அவர் ஊக்கமளித்தார். தெரிவு செய்யப்பட்ட 89 கட்டுரைகளின் தொகுப்பான ‘குடும்ப மருத்துவரை உருவாக்குதல்: வேர்களை அடைதல்’ என்ற நூலினையும் கல்லூரிகளால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் முதலாவது ஆய்வறிக்கையையும் அமைச்சர் நட்டா வெளியிட்டார்.
சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவர்களை அவர் பாராட்டினார். நாடு முழுவதும் புதிதாக எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அனைத்து மக்களும் தரமான சுகாதார வசதிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அதிக அளவில் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News