'நமஸ்கார் இந்தியா' : இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய தேடல்!
இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பறக்கும் போது நமஸ்கார் இந்தியா என்ற வார்த்தை கட்டுப்பாட்டு அறையில் முதலில் ஒலிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.
By : Karthiga
விண்வெளித்துறையில் ஜாம்பவான்களாக திகழும் நாடுகளே சென்று ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் - 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் மூலம் அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் அங்கு பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக தொட்டதும் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் திட்ட கட்டுப்பாட்டு மையத்தில் கொண்டாட்டங்கள் நடந்தது.
இந்தியாவின் வரலாற்று தருணத்தை கொண்டாடும் வகையில் அந்த நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் 'வந்தே மாதரம் 'என்று குரல் எதிரொலித்தது .இது விஞ்ஞானிகளையும் பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது. கடந்த வாரம் இந்த நிலையில் மத்திய அமைச்சரவை மனிதனை விண்ணுக்கு அனுப்பும் மேம்படுத்தப்பட்ட ககன்யான் பணிக்காக ரூபாய் 20,193 கோடிக்கு அனுமதித்தது.இதில் இப்போது இரண்டு மனித விண்வெளி பயணங்கள் அடங்கும். தொடர்ந்து ககன்யானுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-3 நிலவைத் தொட்டதும் வந்தே மாதரம் குரல் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியதை போன்று ககன்யான் வீரர் விண்வெளியில் பறக்கும் போது 'நமஸ்கார் இந்தியா 'என்ற குரல் கட்டுப்பாட்டு அறையில் கேட்க இருக்கிறது. இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெலிமெட்ரி ட்ராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கிங் இயக்குனர் பி.என் ராமகிருஷ்ணா கூறுகையில் இந்தியாவின் 'ககன்யாத்திரி' அல்லது விண்வெளி வீரர் விண்வெளியில் பறக்கும் போது நமஸ்கார் இந்தியா என்ற வார்த்தைகள் முதலில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் பணி செயல்பாட்டு வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 'எதிரொலிக்கும்' என்றார்.