பெண் கல்வியின் முக்கியத்துவம்.. மத்திய அரசு எடுக்கும் முயற்சி ஏராளம்..
By : Bharathi Latha
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், "பெண்கள் இல்லாமலும், கல்வி இல்லாமலும் வளர்ச்சியடைந்த பாரதத்தை நாம் கனவு காண முடியாது. பெண்களும், கல்வியும் நாட்டை வழிநடத்தும் தேரின் இரு சக்கரங்கள்" என்றும் கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய தன்கர், கல்வியின் முக்கியத்துவத்தை, குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "கல்வி என்பது சமூகத்தில் மிகப்பெரிய சமநிலைப் படுத்தும் கருவியாகும். அது சமத்துவத்தைக் கொண்டுவருகிறது. எந்தவொரு சமூகத்திலும் ஜனநாயகம் தழைத்தோங்குவது அவசியம். கல்வி, சமத்துவத்தைக் கொண்டு வருகிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை குறைக்கிறது. கல்வி என்பது சமூக அமைப்பை சமன் செய்யும் ஒரு சிறந்த கருவி. கல்வி ஜனநாயகத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
"நமது வேதங்களைப் பார்த்தால், கல்வி மற்றும் பெண்களின் பங்கேற்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இடையில் எங்கேயோ வழி தவறிவிட்டோம். ஆனால் அந்தக் காலகட்டத்தில், வேத காலத்தில், அதாவது ஆரம்ப காலத்தில், பெண்கள் கொள்கை வகுப்பாளர்களாகவும், முடிவெடுப்பவர்களாகவும், வழிகாட்டும் சக்திகளாகவும் இருந்தனர்" என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் இயற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அவர் தனது உரையில் பாராட்டினார். இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டைக் கட்டாயமாக்குகிறது.
"ஒரு சகாப்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு வரலாற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அரசியலமைப்பு இப்போது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை மகளிருக்கு வழங்கியுள்ளது. அவர்கள் கொள்கை உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் சட்டம் இயற்றுவதில் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் நிர்வாக செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் உந்து சக்தியாக இருப்பார்கள். இது இந்த நூற்றாண்டின் வளர்ச்சி" என்று அவர் மேலும் கூறினார்.
Input & Image courtesy: