அயோத்தியில் தீபத் திருவிழாவை ஒட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
அயோத்தியில் தீபத் திருவிழாவிற்காக சரயு நதிக்கரையில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
By : Karthiga
உத்தரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற உடன் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்சவ் எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள் 2020 ஆம் ஆண்டு 9 லட்சத்துக்கு அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்த 2022 ஆம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபத் திருவிழாவை ஒட்டி அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சரயு நதிக்கரையில் உள்ள 55 படித்துறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. இந்த தீபத் திருவிழாவில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாகவும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.