ராக்கெட்டில் ஈக்கள்:ககன்யான் முதல் பயணத்தில் இஸ்ரோ திட்டம்!
ககன்யான் பயணத்தில் விண்வெளி வீரர்களுடன் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர. இதில் இரண்டு ஆளில்லாத ராக்கெட் மூலம் சோதனை செய்த பின்னர் மூன்றாவது ராக்கெட் ஆட்களை ஏற்றிச் செல்ல இருக்கிறது. இதில் மூன்று இந்திய விண்வெளி வீரர்களை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தாழ்வான பூமி சுற்றுப்பதியில் அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும் .
இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட் நடப்பாண்டில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது .இந்த நிலையில் இந்த ராக்கெட்டில் பழ ஈக்களையும் விண்ணில் அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் முதல் பயணத்தில் வானியலாளர்களுடன் இந்தியா பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5- 60 நாட்கள் என்பதால் அவை ககன்யானின் ஐந்து முதல் ஏழு நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும் ஈக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழு விண்வெளியில் செலுத்தப்படும். மற்றொன்று இரண்டுக்கும் இடையிலான பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும். தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
விண்வெளி பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் ராக்கெட் பயணத்தின் போது அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு பழ ஈக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஈக்கள் மனிதனுக்கான மரபணுவை சுமார் 75 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் அவற்றின் உயிரியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான்-1ல் பழ ஈக்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.