இந்தியாவின் அடித்தளம் சனாதன தர்மம்:இந்தியா ஒரு நாள் உலக நாடுகளுக்கே குருவாக மாறும்!
இந்தியாவின் அடித்தளம் சனாதன தர்மத்தில் உள்ளது என்றும் ஒருநாள் இந்தியா உலக நாடுகளுக்கே குருவாக மாறும் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

By : Karthiga
இந்தியாவின் அடித்தளம் சனாதன தர்மத்தில் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். கொல்கத்தாவில் ஆன்மீக மற்றும் மதத் தலைவரான ஸ்ரீலபிரபுபாதாவின் 150ஆவது பிறந்த தினத்தை ஒட்டி வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
இந்தியா அஹிம்சை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் போதனை மூலம் உலகுக்கே வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இந்த நாடு ஒரு நாள் உலகுக்கு குருவாக மாறும். இந்தியாவின் அடித்தளம் சனாதன தர்மத்தில் அமைந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, தேசபக்தி, ஜாதி, இன பொருளாதார வேறுபாடுகளை கடந்து செயல்படுவது ஆகியவற்றை சனாதன தர்மம் வலியுறுத்துகிறது.இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டுக்கும் 5000 ஆண்டு கலாச்சாரம் இல்லை .உலகின் ஆன்மீக மையமாக இந்தியா திகழ்கிறது. இந்த பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் .
சுமார் 1000, 1200 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கிலும் இருந்து மாணவர்களை ஈர்த்த நம் நாட்டின் பிரபலமான நாளந்தா மற்றும் தட்சசீல பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டு சூரையாடப்பட்ட போது இந்தியா பின்னடைவை சந்தித்தது வருத்தமளிக்கும் நிகழ்வாகும். எனினும் அந்த பின்னடைவிலிருந்து தேசம் மீண்டு வந்தது. இந்தியா தற்போது மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்கிறது. ஆன்மீக வளர்ச்சி இல்லாமல் இது சாத்தியமில்லை . ராமகிருஷ்ண பரமஹம்சர் ,சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ சைதன்யர், ஸ்ரீலபிரபு பாதா ஆகிய பெரிய ஆளுமைகள் காரணமாகவே இந்தியாவின் ஆன்மீக உணர்வையும் நாகரீகத்தையும் உலகம் அங்கீகரித்தது .ஆன்மீக கலாச்சார சுதந்திர போராட்ட இயக்கங்களின் முன்னோடியாக மேற்குவங்கம் திகழ்ந்து வந்துள்ளது. சித்தரஞ்சன் தாஸ், ராம் போஸ் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் மேற்கு வங்கமாகும். இந்த மாநிலத்துக்கும் தேசத்துக்கும் வழிகாட்டியாக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறப்பிடமும் மேற்கு வங்கம் தான் என்றார் அவர்.
