அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்குப் பயன்படும் சோதனையில் வெற்றி கண்ட இஸ்ரோ!
அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எஞ்சின் மகேந்திரகிரியில் சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் சி.இ 20 என்ற கிரையோஜெனிக் எஞ்சின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதனை ராக்கெட்டில் பொருத்துவதற்கு முன்பாக பலகட்ட பரிசோதனைகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் நெல்லை மாவட்டம் மகேந்திர கிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக கிரையோஜெனிக் எஞ்சினை சோதனை செய்தனர்.
இந்த சோதனை எரிவாயு ஜெனரேட்டர் மற்றும் டர்போ பம்புகள் உள்ளிட்ட முக்கிய எந்திர துணை அமைப்பின் ஒருங்கிணைந்த செயல் திறன் மதிப்பீடு செய்தது.ராக்கெட் பூஸ்டர் உந்துவிசைக்கு அவசியமான சோதனையாக இது உள்ளது. காற்று இல்லாத வெற்றிட சூழலில் கூட சி.இ 20 கிரையோஜெனிக் எஞ்சினை இயக்கி பரிசோதித்த போது எதிர்பார்த்தபடி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி அடைந்தது. இஸ்ரோவின் தலைவர் வி நாராயணன் கூறும்போது 'ராக்கெட்டுக்கான மேம்பட்ட உந்துவிசை அமைப்புகளை உருவாக்க ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் வளிமண்டல மற்றும் கிரையோஜெனிக் எந்திர முறைகளுக்கு நடுவில் மாற்றங்களை செயல்படுத்துவதன் மூலம் நீண்ட தூர விண்வெளி பயணத்தை எளிதாக்க முடியும்' என்றார்.