மோடி அரசில் போர் விமானங்கள் தயாரிப்பதில் உச்சத்தை தொடும் இந்தியா!
தனியாருடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் போர் விமானங்கள் பெரிய உச்சத்தை தொடும் என்று ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முதல் முறையாக எம்.கே.1 ஏ வகை இலகுரக போர் விமானத்தின் பின்பகுதியை தயாரித்துள்ளது. இந்த பின்பகுதியை பெங்களூருவில் உள்ள எச்.ஏ. எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. ராணுவ மந்திரி ராஜநாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போர் விமானத்தின் அந்தப் பகுதி எச்.ஏ.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜ்நாத்சிங் பேசியதாவது :-
ஒரு தனியார் நிறுவனம் போர் விமானத்தின் பின்பகுதியை தயாரித்து எச். ஏ.எல் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இது இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி பயணத்தில் ஒரு புதிய மைல்கள் ஆகும். இது பாதுகாப்பு துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும் அரசு தனியார் இணைந்து செயல்பட அரசு உறுதி கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.
எச்.ஏ.எல் நிறுவனம் நாட்டின் ராணுவத் துறையின் விமான உடற்பகுதியாகத் திகழ்கிறது. ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் விமானத்தின் பின்பகுதியாக திகழ்கின்றன. இதன் மூலம் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு தனியார் நிறுவனங்கள் உதவுகின்றன. இந்த இந்திய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இங்கு உற்பத்தி செய்யும் போர் விமானம் வரும் நாட்களில் விமானத் துறையில் பெரிய உச்சத்தை தொடும் மற்றும் தனியார் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு நமது ஆயுதப்படைகளை பலப்படுத்தும் இவ்வாறு அவர் பேசினார்.