பள்ளி ஆவணங்கள்,ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாமா?மத்திய அரசு விளக்கம்!
பள்ளி ஆவணங்கள், ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாமா என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

By : Karthiga
அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை திருமண சான்றிதழ் உட்பட அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள்,ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.அதில் அரசு சேவைகள் ,கல்வி, பயணம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெறுவதற்காக பிறப்பு சான்றிதழ் கட்டாய ஆவணம் ஆக்கப்பட உள்ளது .
எனவே மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்கள் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய பெயரில் மாற்றங்களை செய்ய 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆவணங்கள் வயதை குறிப்பிடும் சான்றாக செயல்படாது. அரசு வழங்கும் பிறப்பு சான்றிதழ் மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும். அரசு அறிவித்துள்ள கடைசி நாளுக்கு பின்னர் பிறப்பு சான்றிதழில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் பொதுமக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் "பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது. பிறப்பு சான்றிதழ் தொடர்பாக இது போன்ற எந்தவித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
