அரசு பள்ளி வகுப்பறையில் பார்வையற்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை- காரணம் என்ன? போலீசார் விசாரணை!
திருச்சியில் பள்ளி வகுப்பறைக்குள் பார்வையற்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவருடைய மகள் ராஜேஸ்வரி. பார்வையற்றவரான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத் திறன் குறைபாடு உடைய மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். மேலும் அவர் பள்ளி வளாகத்துக்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாளாகும். ஆனால் மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை விடுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்தார்.
அங்கு வகுப்பறைக்குள் நுழைந்த அவர் துப்பட்டாவால் திடீரென தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அங்கு வந்த பள்ளி ஊழியர்கள் வகுப்பறையில் மாணவி ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் இட்டனர். இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே இது பற்றி அறிந்த தன்னம்பிக்கை பார்வையற்றோர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தோழிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தினார்கள். அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் தங்கபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.