கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்கள் இட ஒதுக்கீடு மீண்டும் வராது- தர்மேந்திர பிரதான்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கையின் போது தங்கள் தொகுதிக்கு உட்பட்ட 10 மாணவர்களை ஆண்டுதோறும் எம்.பிக்கள் பரிந்துரைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதன் மூலம் மக்களவையை சேர்ந்த 543 எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவை சேர்ந்த 245 எம்.பிக்கள் இடம் என மொத்தம் 788 எம்.பிக்கள் தலா 10 பேர் வீதம் ஆண்டுக்கு 750 மாணவ மாணவிகளை பரிந்துரைக்கலாம். இந்த நடைமுறையை கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் தர்மேந்திர பிரதான் கூறிய பதில்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்கள் இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு சிறப்பு இட ஒதுக்கீடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்கை முறையை ஏற்கனவே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நடைமுறைகளின் கீழ் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இது மாணவர் ஆசிரியர் வீதத்தை பாதிப்பதால் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே இந்த நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.