Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த குரூ டிராகன்!

சுனிதா வில்லியம்சை மீட்டுக் கொண்டுவர குரூ டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த குரூ டிராகன்!
X

KarthigaBy : Karthiga

  |  16 March 2025 1:15 PM

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவருடன் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு எட்டு நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.

இதனை அடுத்து வேறொரு விண்கலத்தைச் சேர்ந்த விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர நாசா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்தன. இதனால் அவர்கள் இருவரும் மாதக்கணக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த வகையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீரர்கள் இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை நாடினார்.

அதனை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விரைவில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என உறுதி அளித்தார்.அதன்படி ஸ்பேஸ் நிறுவனத்தின் குரூ டிராகன் விண்கலம் பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லைன், நிக்கோல் அயர்ஸ் ஜப்பானைச் சேர்ந்த டகுயா ஒனிஷி , ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் குரூ டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி நேற்று காலை 11:15 மணியளவில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்ததும் அதில் இருந்த விண்வெளி வீரர்கள் நான்கு பேரும் ஒவ்வொருவராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்களை கண்டதும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். தற்போது சென்றுள்ள விண்வெளி வீரர்கள் நான்கு பேரும் சில வாரங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த ஆய்வு செய்வர் என்று தெரிகிறது. அதே வேளையில் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் இந்த வாரத்துக்குள் குரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News