தமிழக முன்னேற்றம் கருதி பாடுபட்டதற்காக குமரி அனந்தன் போற்றப்படுவார்: பிரதமர் புகழஞ்சலி!

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் அவர்கள் வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன இவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குமரி ஆனந்தன் அவர்களின் மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, குமரி அனந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தலைவர் திரு. குமரி அனந்தன் மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, "குமரி அனந்தன் அவர்கள் சமூகத்திற்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி" என கூறியுள்ளார்.