நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க அனைத்து வங்கிகளும் தயார்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

By : Bharathi Latha
எல்லையில் பதட்டங்கள் காரணமாக எழும் பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார்.
இணைய வங்கி மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் பயன்பாடுகள் உட்பட வங்கித் துறையின் செயல்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்திய கூட்டத்தில் நிதி சேவைகள் துறை, நிதி அமைச்சகம், கணினி அவசர கால மீட்புக்குழு, ரிசர்வ் வங்கி, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சவாலான காலங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் வங்கி மற்றும் நிதித் துறையின் முக்கிய பங்கு குறித்து திருமதி சீதாராமன் வலியுறுத்தினார்.
எந்தவொரு நிகழ்வு அல்லது நெருக்கடியையும் சமாளிக்க அனைத்து வங்கிகளும் முழுமையாக விழிப்புடன் இருக்கவும், தயாராக இருக்கவும், நாடு முழுவதும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார். நேரடி மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள், இடையூறுகள் மற்றும் குறைபாடுகள் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
