மோடி அரசின் ஆட்சியின் மூலம் நிர்வாகப் பயணத்தில் மாற்றம்: மத்திய அமைச்சர் பெருமிதம்!

By : Bharathi Latha
உத்தராகண்ட் மாநிலம் மிசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக்கழகத்தில் இந்திய குடிமைப்பணி பயிற்சியாளர்கள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடையே உரையாற்றிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நிர்வாகப் பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி எடுத்துரைத்தார்.
2014-ம் ஆண்டுக்கு முன் நிர்வாக பணிகளும், மனநிலைகளும் காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சங்களாக தொடர்ந்தன. ஆனால் பிரதமர் மோடி தலைமையின் கீழ் சேவை வழங்குதல், ஜனநாயகமயம் ஆக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு வருவாய் வசூலிக்கும் பொறுப்பு கலெக்டர் என்பவரின் பங்காக இருந்தது. இந்தப்பதவி மக்கள் நல அரசின் காலத்தில் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் என்பதாக மாற்றப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சேவை வழங்குவதில் வெளிப்படை தன்மை, எளிதில் அணுகுதல், திறமை ஆகியவற்றை விரிவுபடுத்த பல முக்கியமான சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ் வழங்குவதற்கான இயக்கம் ஓய்வூதிய விநியோகத்தில் புரட்சிகர மாற்றத்தை செய்துள்ளது என்றும் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் அடையாளத்தை சரிபார்க்க முக அங்கீகார தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் வங்கி கிளைகளுக்கு அவர்கள் நேரடியாக செல்லவேண்டிய தேவை நீக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார். நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க ஒற்றை ஓய்வூதிய படிவம் அறிமுகம் செய்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
