இந்திய குடிமக்கள் குடியுரிமை பெற புதிய இணையதளம்: மோடி அரசின் முன் முயற்சி!

By : Bharathi Latha
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் இன்று வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அமைப்பு இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஏனைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தமது வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த குடியுரிமை வசதிகளை வழங்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கான பதிவு செயல்முறையை எளிதாக்குவதற்காக புதுப்பிக்கப்பட்ட பயனர் இடைமுகத்துடன் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை இணையதளம் தொடங்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான குடிமக்கள் வசிக்கின்றனர் என்றும், அவர்கள் இந்தியாவுக்கு வருகைதரும்போது அல்லது தங்கும்போது எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை நாம் அவசியம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார். புதிய இணையதளம், தற்போதுள்ள 5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் புதிய பயனர்களுக்கு மேம்பட்ட செயல்பாடு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் உகந்த அனுபவத்தை வழங்கும் என கூறினார்.
