இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்று முயற்சி!

கார்கள் முதல் கிராமங்கள் வரை மின்மயமாக்கலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலகில், ஒரு அம்சம் மிக முக்கியமானது. அவை குறைந்த விலையிலான, விரைவான மற்றும் பாதுகாப்பான பேட்டரிகள் ஆகும். இதுவரை இந்தப் புரட்சிக்கு லித்தியம்-அயன் பேட்டரிகள் சக்தி அளித்திருந்தாலும், அவை விலை அதிகமாகும். மேலும், லித்தியம் வளங்கள் குறைவாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பெங்களூருவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு சக்திவாய்ந்த மாற்றை கண்டுபிடித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக் குழு, நாசிகோன் வகை எதிர் மின் முனை மற்றும் நேர் மின் முனை பொருளை அடிப்படையாகக் கொண்ட அதிவேக சார்ஜிங் சோடியம்-அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது. இது ஆறு நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்து 3000 சார்ஜ் சுழற்சிகளுக்கு மேல் நீடிக்கும்.
தாமதமான சார்ஜிங் மற்றும் குறுகிய ஆயுட்காலத்தால் பாதிக்கப்படும் வழக்கமான சோடியம் அயன் பேட்டரிகளை போலன்றி, இந்தப் புதிய பேட்டரி வேதியியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்திறன் கலவையைப் பயன்படுத்துகிறது. பேராசிரியர் பிரேம்குமார் செங்குட்டுவன் தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் முனைவர். அறிஞர் பிப்லாப் பத்ரா, நேர் மின் முனைக்கான ஒரு புதிய பொருளை வடிவமைத்தனர். மேலும் அதை மூன்று முக்கியமான வழிகளில் மேம்படுத்தினார்கள். - துகள்களை நானோ அளவிற்கு சுருக்கி, மெல்லிய கார்பன் கோட்டில் வைத்து, சிறிய அளவு அலுமினியத்தைச் சேர்ப்பதன் மூலம் நேர் மின் முனைப் பொருளை மேம்படுத்தினார்கள். இந்த மாற்றங்கள் சோடியம் அயனிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் நகர்த்தச் செய்தன, இதனால் விரைவாகவும் நீடித்தும் உழைக்க முடியும்.