உலக அரங்கில் வெற்றி நடை போடும் இந்தியா: அதுவும் வேளாண்மை துறையில் தெரியுமா?

By : Bharathi Latha
பீகார் அரசு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய வர்த்தக மேம்பாட்டு குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், பீகாரில் உள்ள கியான் பவனில் முதலாவது சர்வதேச வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு பீகாரின் வேளாண் உணவுப் பயணத்தில் சிறப்பான சாதனையாகும். மாநிலத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இடையே முன்னணி சர்வதேச வாங்குபவர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தியது.
பீகாரின் பொருளாதார மறுமலர்ச்சியில் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பைச் சிறப்பித்து கூறிய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களாக மாறுவார்கள் என்றும், உள்ளூர் பயிர்கள் உலகளாவிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், கானா, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சர்வதேச வாங்குபவர்களும், 50-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் 20 நிறுவன வாங்குபவர்களும் கலந்துகொண்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட இருதரப்பு வர்த்தகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பீகாரின் முக்கிய தயாரிப்புகளான புவிசார் குறியீடு பெற்றுள்ள மக்கானா, ஷாஹி லிச்சி, சர்தாலு மாம்பழம் மற்றும் கட்டர்னி அரிசி ஆகியவை முன்னோடியில்லாத வகையில் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.
