புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி உற்பத்தி: உற்பத்தியில் இந்தியா டாப்!

By : Bharathi Latha
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவானது வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறினார். கடந்த பதினொரு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்கு பிராந்தியம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகவும் கூறினார். புதுதில்லியில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் 'பசுமை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பல்வேறு மாநிலங்களின் துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத ஏராளமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைக் கொண்டுள்ளது.இதில் பெரிய அளவிலான நீர் மின் திட்டங்களிலிருந்து 129 ஜிகாவாட் மின்சாரமும் நீர் சேமிப்பு நிலையங்களிலிருந்து 18 ஜிகா வாட்டுக்கும் கூடுதலான மின் உற்பத்திக்கான ஆற்றலும் அடங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்த இயற்கை வளங்கள், அதிகரித்து வரும் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதுடன் பசுமை வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
