துறைமுகங்களை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா.?

By : Bharathi Latha
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டெராடா யோஷிமிச்சி உடன் ஒஸ்லோ நகரில் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய கப்பல் கட்டும் தளங்களின் முதலீடு, துறைமுகங்களை டிஜிட்டல் மயமாக்கல், பசுமைத் துறைமுக முயற்சிகளில் ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை அதிகரித்தல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
நிலையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளை ஸ்மார்ட் தீவுகளாக மாற்றுவது குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். தீவுப் பிரதேசங்களை மேம்படுத்துவதில் ஜப்பானின் வளமான நிபுணத்துவத்தை விவரித்த திரு சர்பானந்த சோனோவால், “அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் கூட்டுப் பணிக்கான வாய்ப்பை இந்தியா உணர்ந்துள்ளதாக கூறினார். இந்த முயற்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பிற்கான இருதரப்பினரிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஜப்பானிய கப்பல் கட்டும் தளங்களுக்கு இடையேயான கூட்டாண்மையை அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பதில் ஜப்பானின் நிபுணத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பகுதியில் ஒத்துழைப்புக்கு பெரும் வாய்ப்பு இருப்பதை தாம் உணர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
