இந்தியாவின் வளர்ந்து வரும் அந்நிய நேரடி முதலீடு: மோடி அரசின் முக்கிய திட்டம்!

தில்லியில் உள்ள வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்டமேசை கருத்தரங்கில் முதலீட்டாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு இந்தியாவின் வளர்ந்து வரும் முதலீட்டுக்கு உகந்த சூழல் அமைப்பு, எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், வருவாய் மறு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான உத்திகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இந்த நிகழ்வில் முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 90-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.
நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகளால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயலின் காணொளி செய்தியுடன் இந்த கருத்தரங்கம் தொடங்கியது. இதில் முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த அவர், பெரும்பாலான துறைகளில் முறைப்படுத்தப்பட்ட வகையில் 100 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். 2013-14-ம் ஆண்டில் 89 நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 112 நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடுகள் வருவதாக திரு கோயல் தெரிவித்தார். இது முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.