பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம்: முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் தருணம்!

By : Bharathi Latha
சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிடிஸின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். சைப்ரஸின் நிக்கோசியாவில் இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் கிறிஸ்டோடௌலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார். லிமாசோலில் வணிகத் தலைவர்கள் இடையேயும் பிரதமர் உரையாற்றுகிறார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், மத்திய தரைக் கடல் பகுதி, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தப் பயணம் வகை செய்யும்.
தமது பயணத்தின் இரண்டாம் கட்டமாக, கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர 2025 ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் கனடாவில் உள்ள கனனாஸ்கிஸுக்குச் சென்று அங்கு நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் தொடர்ச்சியாக 6-வது முறையாக பங்கேற்கவுள்ளார். இந்த உச்சிமாநாட்டில், எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை குறித்தும் முக்கியமான உலகளாவிய விவகாரங்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு, போக்குவரத்து இணைப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். ஜி-7 நாடுகளின் தலைவர்கள், அழைக்கப்பட்ட பிற நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோருடனும் பிரதமர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் பல இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.
தமது இந்தப் பயணத்தின் நிறைவுக் கட்டமாக, குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இருதரப்பு உறவில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்புப் பேச்சுகளை நடத்துவார்.
