நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனங்கள்: தொடங்கிய மத்திய அரசு!

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் குறைந்தது ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, விஜயகுமார், முன்பைவிட இப்போது பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பாஸ்போர்ட்களை பெறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். சாதாரண விண்ணப்பங்களுக்கு தற்போது 30 நாட்களுக்குள்ளும் தட்கல் விண்ணப்பங்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
மக்களைத் தேடிச் சென்று பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தின் கீழ் அண்மையில் தொடங்கப்பட்ட நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனங்கள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படும். 2025 ஜூலை 7 முதல் 9 வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும் என்ற தகவல்களையும் அவர் வெளியிட்டார்.