டிரினிடாட் & டொபாகோ டொபாகோவின் மிக உயர்ந்த விருது: பிரதமர் மோடிக்கு வழங்கிய தருணம்!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், டிரினிடாட் & டொபாகோ குடியரசின் தலைவர் மேன்மை தங்கிய கிறிஸ்டின் கார்லா கங்கலூ, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிரினிடாட் & டொபாகோவின் மிக உயர்ந்த தேசிய விருதான "தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ" விருதை வழங்கினார்.
அவரது அரசியல் திறமைக்காகவும், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை ஆதரித்ததற்காகவும், இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவர் அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காகவும் இந்த விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் ஆவார். இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவுக்கு இந்த கௌரவத்தை அர்ப்பணித்தார். இந்த சிறப்பு உறவுகள் 180 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிற்கு வந்த இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப் படுத்தினார். இந்த நிகழ்வில் டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் மேதகு திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.