பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது: வழங்கப்பட்ட பெருமையான தருணம்!

By : Bharathi Latha
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் மாண்புமிகு டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, அதிபர் நந்தி-நதைத்வா அன்புடன் வரவேற்று, சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். பிரதமர் அளவில் இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கான இந்தப் பயணம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளபட்ட பயணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் நந்தி-நதைத்வா நடத்திய முதல் இருதரப்பு அரசு முறை சந்திப்பும் இதுவாகும்.
நமீபியாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அதிபர் நந்தி-நதைத்வாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பெருமைமிக்க வரலாற்றை நினைவு கூர்ந்தனர். நமீபியாவின் நிறுவனர் தந்தை டாக்டர் சாம் நுஜோமாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் & யுபிஐ, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருந்து, எரிசக்தி மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இருதரப்பு வர்த்தக வளர்ச்சியில் திருப்தி தெரிவித்த தலைவர்கள், இந்த விஷயத்தில் முழு ஆற்றலையும் இன்னும் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர். இது சம்பந்தமாக, இந்தியா-தென்னாப்பிரிக்க சுங்க ஒன்றியம் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவாதங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். நமீபிய நிபுணர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு முயற்சிகளை இந்தியா அதிகரிக்கும் என்றும், நமீபியாவில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதில் கூட்டாண்மைகளை ஆராயும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் விரைவான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் வழங்கினார். விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார், இது நமீபியாவிற்கு மதிப்பைக் கொண்டுவரும் ஒரு திட்டமாகும்.
