இளைஞர்களை டிஜிட்டல் தூதர்களாக மாற்றும் சஞ்சார் மித்ரா திட்டம்!

By : Bharathi Latha
மத்திய தொலைத் தொடர்புத்துறை கள அலுவலகம் சார்பில் அசாம் குவஹாத்தி நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஐஐடி, என்ஐடி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. நாட்டு மக்களுக்கும், தொலைத்தொடர்பு சூழல் அமைப்பிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் தன்னார்வ மாணவர்களை டிஜிட்டல் தூதர்களாக ஈடுபடுத்தும் புதுமையான முயற்சியான சஞ்சார் மித்ரா திட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
புதுதில்லி டெலிகாம் தலைமை இயக்குநர் திருமதி சுனிதா சந்திரா, கூடுதல் தலைமை இயக்குநர் சுரேஷ் பூரி, இணை தலைமை இயக்குநரும் தொலைத் தொடர்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ஹேமந்த்ர குமார் ஷர்மா உள்ளிட்டோர் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய டெலிகாம் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹேமந்த்ர குமார் ஷர்மா, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆற்றலையும், சேவைகளையும் இந்தத் திட்டத்தில் பயன்படுத்த தாங்கள் விரும்புவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட சஞ்சார் மித்ரா திட்டத்தை வடகிழக்குப் பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தத் திட்டமானது ஜனநாயகம், மக்கள் தொகை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விநியோகம் என்ற நான்கு நிலைகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். விரிவாக்கப்பட்ட சஞ்சார் மித்ரா திட்டம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துடன், 5ஜி, 6ஜி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட அதிநவீன தொலைத் தொடர்பு துறையின் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.
