ரயில் பெட்டிகளில் இனி சி.சி.டி.வி கேமராக்கள்: இந்திய ரயில்வே அதிரடி முடிவு!

By : Bharathi Latha
பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்
ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும் ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும். ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
