இந்திய விண்வெளி ஆராய்ச்சி: புதிய சாதனை படைக்க காத்துக் கொண்டிருக்கும் இந்தியா!

By : Bharathi Latha
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் "நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்" (நிசார்) இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இங்கு தெரிவித்தார். ஊடகங்களுக்கு விளக்கமளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் பணிகள் முடிவடைந்து இருப்பதால் அது ஜூலை 30, 2025 அன்று மாலை 5:40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மற்றும் அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் – நாசா (NASA) ஆகியவற்றுக்கு இடையேயான முதல் கூட்டு நடவடிக்கையான இது இந்திய-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பின் பயணத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறிக்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் பூமியை கண்காணிக்க இரு தரப்பு ஒத்துழைப்புடனான பணியாக இது அமைய இருக்கிறது. மேலும் இஸ்ரோவின் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்புகளிலும் இது ஒரு முக்கிய தருணம் என்றும் அவர் கூறினார். இந்த ரேடார் இந்தியாவின் GSLV-F16 ராக்கெட் வாயிலாக ஏவப்படும்.
இந்த பணியை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த ஏவுதல் உத்திசார் அறிவியல் கூட்டாண்மைகளின் முதிர்ச்சியையும், மேம்பட்ட பூமி கண்காணிப்பு அமைப்புகளில் நம்பகமான உலகளாவிய வல்லமையாக இந்தியா உருவெடுப்பதையும் பிரதிபலிக்கிறது என்றார். இந்த வரலாற்று நிகழ்வைக் காண ஸ்ரீஹரிகோட்டாவில் நேரில் இருக்க வேண்டும் என்று விரும்பிய போதிலும், நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக அது நிகழாமல் போக வாய்ப்பு இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
