பிரதமரின் அட்வைஸ்.. மக்கள் பின்பற்றினால் இந்தியா வேற லெவல்: மத்திய அமைச்சர் உறுதி!

By : Bharathi Latha
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 02 அன்று வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, நாட்டு மக்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைக்கும் வகையில், மத்திய வேளாண் அமைச்சர் பிரதமரின் வேண்டுகோளை சுட்டிக்காட்டி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:"அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமக்காக மட்டுமே வாழ்வதன் பயன் என்ன? நாம் நம் நாட்டிற்காக வாழ வேண்டும். தேசத்திற்காக வாழ்வது என்பதைத் தான் பிரதமர் நமக்குக் கற்றுக் கொடுக்கிறார். நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே நம் இல்லங்களுக்கு வாங்குமாறு அவர் நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் கிராமத்தில், அருகிலுள்ள நகரத்தில், உங்கள் மாவட்டத்தில், உங்கள் மாநிலத்தில் அல்லது நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டும் வாங்குங்கள். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது, நாம் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறோம், மிக விரைவில், மூன்றாவது இடத்தை அடைவோம். மேலும் 144 கோடி மக்கள் வசிக்கும் இந்த நாடு ஒரு பெரிய சந்தையாகும். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டால், நமது விவசாயிகள், நமது சிறு உற்பத்தியாளர்கள், சுயஉதவிக் குழுக்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என அனைவரது வருமானமும் அதிகரிக்கும். மேலும் அவர்களின் வருவாய் வளரும்போது, நமது பொருளாதாரம் வலுவடையும்.
