யானைகள் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது: மத்திய இணையமைச்சர் உறுதி!

By : Bharathi Latha
உலக யானைகள் தினம் 2025 கொண்டாட்டங்களை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலை உணர்வு மற்றும் புவிசார் வரைபடம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பாரம்பரிய அறிவுசார் அம்சத்துடன் இணைப்பதன் மூலம், இந்தியா யானைகளுக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது என்று கூறினார். உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில், மனித-யானை மோதலைக் தவிர்ப்பதற்கு பல்வேறு துறைகளின் ஈடுபாடு, சமூக பங்கேற்பு மற்றும் அறிவியல் அணுகுமுறைகளின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு வெறும் கொள்கைத் தேர்வு மட்டுமல்லாமல், நமது நாகரிக மதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் பிரதிபலிப்பாகும் என்று திரு கீர்த்தி வர்தன் சிங் கூறினார். நாட்டில் உள்ள 33 யானைகள் காப்பகங்கள், 150 அறிவியல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட வழித்தடங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். யானைகளுக்கு தேசிய பாரம்பரிய விலங்கு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளில் அவை மதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
யானைகளுடனான இந்தியாவின் தொடர்பு ஆழமானது, மதம் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது என்று இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் குறிப்பிட்டார். பீம்பேட்காவில் உள்ள பண்டைய குகை ஓவியங்கள் முதல் தென்னிந்தியாவில் உள்ள கோயில் சடங்குகள் வரை, யானைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். விநாயகர் வடிவமாக மதிக்கப்படும் யானைகள், இந்திய கலை, வேதங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை ஊக்குவித்து, மனிதர்களுக்கும் இந்த கம்பீரமான உயிரினங்களுக்கும் இடையிலான காலத்தால் அழியாத சகவாழ்வை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.
