"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் குறித்து உண்மையை உடைத்த வருவாய்த்துறை!!

By : G Pradeep
தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்பொழுது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் படி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை செலுத்தி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான மனுக்கள் வருவாய்த்துறை தொடர்புடையதாக இருப்பதால் தொடர்ச்சியாக முகாம் வேலைகள் இருப்பதால் வழக்கமாக செய்யப்படும் பணிகள் சேர்த்து பார்த்து ஓய்வின்றி பணியாற்றும் நிலை இருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாம் வாரத்தில் ஐந்து நாட்கள் என வரும் நவம்பர் மாதத்திற்குள் பத்தாயிரம் முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நகரப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு என தனித்தனியாக பிரித்து சேவைகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவரான முருகையா கால இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகின்றன. அதில் பெறப்படும் மனுக்கள் விசாரணை செய்திட போதிய அவகாசமும் கொடுக்கப்படாமல் பணி நெருக்கடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுத் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் சென்றடைய வருவாய்த்துறை ஓய்வின்றி உழைப்பதாகவும், ஆனால் அதற்கான பணியிடம் ஒதுக்காமலும் நிதி அளிக்காமலும் கால அவகாசம் வழங்காமலும் அரசு செயல்படுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாரத்திற்கு இரண்டு எனக் குறைத்துக் கொண்டால் நன்று எனவும், இதற்குரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
