வாட்ஸ் அப்-க்கு பதிலாக புதிய செயலியா??இந்தியாவின் சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி!

By : G Pradeep
வாட்ஸ் அப் போலவே தற்பொழுது இந்தியாவில் புதிதாக அரட்டை என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோஹோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த செயலியை முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாக சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலியானது முற்றிலுமாக இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையிலும், எளிதாக பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்செயலியின் குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி ஜான் அளித்த பேட்டியில், அரட்டை செயலி பத்து லட்சம் பயனாளர்களை தாண்டி விட்டதாக கூறினார்.
தற்பொழுது பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் செயலிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், அதனால் இந்த செயலியின் பயன்பாட்டை நீடிப்பதற்காக நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும் இந்த செயலியில் தனியுரிமை, மதிப்பு சார்ந்த விஷயங்களில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும், உரையாடல் மற்றும் வீடியோ கால் போன்றவை முழுமையான பாதுகாப்புடன் இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த செயலியில் யூபிஐ பயன்பாடு வசதிகளை சேர்ப்பதற்காகவும் திட்டமிட்டு வருவதாக கூறினார். இச்செயலியின் பெயரை மாற்றும் எண்ணம் இல்லை என்றும், வாடிக்கையாளரின் தகவல்களை யாருக்கும் விற்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.
