வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்டுகளை கொண்டுவரும் மெட்டா நிறுவனம்!! அரட்டை செயலியுடன் போட்டியா?

By : G Pradeep
கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஷோகோ நிறுவனத்தின் கண்டுபிடிப்பான அரட்டை செயலி பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த அரட்டை செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் அரட்டை செயலி ஆப் ஸ்டோரில் மெசேஜிங் ஆப் பிரிவில் முதன்மையான இடத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மெட்டா நிறுவனம் whatsapp செயலியின் பயன்பாட்டை முன்னிறுத்தும் வகையில் சில அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ளது. பொதுவாக வாட்ஸப் செயலியை 300 கோடிக்கும் அதிகமாக பயன்படுத்தும் பயனாளர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த whatsapp செயலியில் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மட்டுமல்லாமல் வீடியோ அழைப்பு மற்றும் ஆடியோ அழைப்பு போன்றவற்றையும் செய்து கொள்ள முடியும். மேலும் பயனாளர்கள் தங்களுடைய பயன்பாட்டிற்கு ஏற்ப குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் பலருக்கும் செய்திகளை பரிமாற முடியும்.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்ஸ் அப்பில் புதிய புதிய அப்டேட்டுகளை கொண்டு வருவது வழக்கம். அப்படி இருக்கையில் தற்பொழுது பயனாளர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளவும், வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஏஐ பயன்படுத்தி பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதிலும் பேக்ரவுண்ட் மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அப்டேட் விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அரட்டை செயலியை விட whatsapp முன்னிலையில் இருக்க வேண்டும் என்று இதுபோன்ற புதிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
