திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதித்த நீதிபதிகள்!!

By : G Pradeep
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ராஜ கோபுரத்தின் முன்பாக கோவில் நிதியை பயன்படுத்தி வணிகவளாகம் கட்டப் போவதாக எழுந்த தகவலை அடிப்படையாக வைத்து அதனை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் ஆன டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதை தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதிகள் கோவிலுக்குள் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் தற்பொழுது திருவண்ணாமலை கோவிலுக்கு மாவட்ட நீதிபதி மதுசூதனன், எஸ்.பி. எம். சுதாகர், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், ஆட்சியர் கா.தர்ப்பகராஜ் உட்பட பல அதிகாரிகள் நேரில் சென்று ராஜகோபுரம் முன்பாக அமைந்திருக்கும் அம்மனி அம்மன் கோபுரம் அருகில் நடைபெறும் கட்டுமான பணியையும், கோவில் வளாகத்திற்குள் இருக்கும் விருந்தினர் இல்லங்களையும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து பார்வையிடும் பொழுது கோசாலை பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் வளாகத்திற்குள் எந்தவித நிரந்தர கட்டிடமும் கட்டக் கூடாது என்றும், காத்திருப்பு பகுதியை காற்றோட்டத்துடன், மேல் பகுதியில் சீட் போன்றவற்றை அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தினால் போதும் பெரிய கட்டிடங்கள் தேவையில்லை என்று கூறினர்.
மேலும் கோவில் வளாகத்திற்குள் கழிப்பறை கட்டக்கூடாது என்றும் கோவில் சுவர்களை சேதப்படுத்த கூடாது என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கும் கடை கட்டுவதற்கான திட்டத்தையும் பார்த்து கோவில் வளாகத்திற்குள் எவ்வித கட்டடமும் கட்டக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
