நியூசிலாந்து: ஒரே ஒரு கொரோனா பாதிப்பு, முழு ஊரடங்கு அறிவித்த பிரதமர் !
நியூஸிலாந்தின் ஒரே ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அறிவித்த பிரதமரின் அதிரடி செயல்.
By : Bharathi Latha
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் வலுப்பெற்ற நாடுகளில்கூட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு தொற்றை சிறப்பாக கையாண்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை வெகு விரைவாக கட்டுப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது நியூசிலாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முழு ஊரடங்கை அறிவித்து நியூசிலாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை 26 பேர் மட்டுமே பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 மாதங்களாக அங்கு புதிய தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது, நியூசிலாந்தின் உள்ள ஆக்லாந்து நகரில் எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாத ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கும், மேலும் ஆக்லாந்து நகரிலும், பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் சென்று வந்த மற்ற நகரிலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்றும் நியூசிலாந்து அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Image courtesy:Indian Express