கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கோழிக்கோட்டில் போராட்டம் - கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கோழிக்கோட்டில் போராட்டம் - கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு!
By : Kathir Webdesk
கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதை பிரித்துப்பார்த்தபோது அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.
தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் அது குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. இதில் தூதரக முன்னாள் ஊழியரான சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் என்பது தெரிய வருகிறது.
இந்த ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரள தங்கக் கடத்தல் ஊழல் வெளிச்சத்திற்கு வந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கோழிக்கோட்டில் போராட்டமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.