ஜமாத் இ இஸ்லாமி: பயங்கரவாதத்துக்கு நிதி உதவி - காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியுள்ளது.
By : Karthiga
காஷ்மீரைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது .ஐந்தாண்டுகளுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கிடையே தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர்.
பட்கம் ,பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடந்தது. காஷ்மீரில் ஜி- 20 நாடுகள் அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் 21- ஆம் தேதி முதல் 23 - ஆம் தேதி வரை நடக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடக்கும் முதலாவது மிகப்பெரிய சர்வதேச நிகழ்ச்சி இதுவாகும் .
அதை ஒட்டி பயங்கரவாதிகள் அவர்களது ஆதரவாளர்கள், நிதி உதவி செய்பவர்கள் ஆகிவருக்கு எதிரான வேட்டையை என்.ஐ.ஏ முடிக்கிவிட்டது. கடந்த ஒன்பதாம் தேதி காஷ்மீரின் புதிதாக தொடங்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக 16 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது . பத்தாம் தேதி பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளின் சொத்துக்களை என்.ஐ.ஏ முடக்கியது.