தீப்பட்டி தொழிலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா
தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் மதிய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
By : Karthiga
தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று மாநாடு நடைபெற்றது. தீப்பட்டி தொழிலுக்கு இருந்த 18 சதவீத ஜி.எஸ்.டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதில் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை தீப்பெட்டி சங்க தலைவர் பரமசிவம் மாநாட்டு தலைவர் ராஜேந்திர குமார் பகட்டி, தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பா.ஜனதா மாநில செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். அதை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
தென் மாவட்ட மக்கள் படும் கஷ்டங்களை நான் அறிவேன். வறண்டு கிடக்கும் அந்த மண்ணில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல சிறு தொழிலை முன்னோர்கள் தொடங்கினார்கள். தம்மோடு தொழில் வாய்ப்புகள் முடிந்து விடாமல் எதிர்கால தலைமுறைகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழிற் பயிற்சி பெற்று அதை நடத்தி இருக்கிறார்கள். அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.தற்போது பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதற்கான ஆராய்ச்சி மூலதனம் அதையெல்லாம் செய்யக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுத்தால் தான் அதில் தீர்வு காண முடியும். தீப்பெட்டி தொழிலைப் பொறுத்தவரை முன்பு உலக அளவில் முன்னணி நாடாக இருந்த சுவீடன் இன்று 15 சதவீதமே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் உலகில் தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம். தீப்பெட்டி தொழிலில் சிகரெட் லைட்டர் மூலம் இடையூறு இருப்பதாக என்னிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வர்த்தக துணை மந்திரி பியூஸ் கோயலுடன் கலந்து பேசி இடையூறுகளை கலைவதற்கான முயற்சிகளை எடுக்கிறேன். ஊதுபத்தி தொழிலுக்கான மூங்கில் குச்சிகள் வடக்கு இந்தியாவிலேயே நிறைய கிடைப்பதாக பிரதமரே சொல்லி இருக்கிறார். எனவே அதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.