தொடங்கப்போகும் புதிய கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்பாம்! தமிழருவி மணியன் பதிலால் ரசிகர்கள் குதூகலம்!
தொடங்கப்போகும் புதிய கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்பாம்! தமிழருவி மணியன் பதிலால் ரசிகர்கள் குதூகலம்!
By : Kathir Webdesk
வரும் 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்றும் கட்சியின் சட்டவிதிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்றும் மக்கள் மன்ற வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு நம்பகமான நண்பரும், பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் இது பற்றிக் கூறுகையில், 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் புதிய கூட்டணி அமையும். தமிழக அரசியலில் உண்மையான வலிமைமிக்க தலைவர் இல்லை என்றே நானும் உணருகிறேன். பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கு வாய்ப்பு உண்டு என்றார். சமீபத்திய இவரது பேச்சு மன்ற ரசிகர்களுக்கு புது தெம்பை உருவாக்கியுள்ளதாம்.
அதே சமயம் பல நிபந்தனைகளை பாஜக ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணிக்கு அண்ணன் ஒப்புக் கொள்வார் என்றும் குறிப்பாக நதிகள் இணைப்பு, ஹைட்ரோகார்பன் ரத்து, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் மத்திய அரசிடன் வைப்பார் என்றும் அதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி உறுதிதான் எனவும் மன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அரசியல் வியூகத்தை வகுப்பது தொடர்பாக மூத்த பிஜேபி தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, நேற்று தர்மபுரியில் பேசுகையில், எனது சகோதரர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார், இது உறுதி என்றார். மேலும் அவர் நல்லவர்களுடன், நல்லது செய்யும் வலுவுள்ளவர்களுடன் கூட்டணி சேர்வார் என்று கூறியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாம்.
ரஜினியின் கையில் தற்போது 3 படங்கள் உள்ளன. தர்பார் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக உள்ளது. சன் நெட்வொர்க் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தெரிகிறது. 3-வது படத்தை சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் கோணத்தில், பஞ்ச் டயலாக்குடன் தயாரிக்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுவதாக அமையும் என்றும் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Source:- Malaisudar