தாய்மொழியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு - பிரதமர் மோடி பேச்சு
சில கட்சிகள் மொழி அரசியல் விளையாட்டு ஈடுபடுவதாகவும் ஆனால் மருத்துவ மற்றும் தொழிற்படிப்புகளை தாய்மொழிகளில் படிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சிக்பள்ளாபூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
By : Karthiga
பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார். மாவட்டம் முத்தேனஹள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மதுசூதன் சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது :-
நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக 300க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகளே இருந்தன. தற்போது நாடு முழுவதும் 650 மருத்துவகள் கல்லூரிகள் உள்ளன . அதனுடன் புதிதாக 150 நர்சிங் கல்லூரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போது வரை எத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறார்களோ அதிலிருந்து இரு மடங்கு டாக்டர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள். நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்காக மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை எளிய மக்களின் பணம் மிச்சமாக வருகிறது. எங்கள் அரசு ஏழைகளின் கஷ்டத்தை போக்க துணை நிற்கிறது. ரூபாய் 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டம் மூலமாக இதய நோய் , பிற அறுவை சிகிச்சைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் . முன்பு அறுவை சிகிச்சைகளுக்காக ஆன பெரும் செலவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது
மருத்துவ துறையில் காணப்படும் ஒரு சவாலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அரசியல் சுயநலம், வாக்கு வங்கி, அரசியல் உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில அரசியல் கட்சிகள் மொழியை வைத்து கொண்டு அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன. அந்த மொழியின் வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகள் எதையும் முன்னெடுத்து வைக்கவில்லை. இந்த சவால்கள் காரணமாகவே கிராமங்களை சேர்ந்த ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களால் மருத்துவர்கள் ஆக முடியாத நிலை காணப்படுகிறது.
நமது நாட்டை ஆண்ட இதற்கு முந்தைய அரசுகள் மருத்துவம் தொழில் படிப்புகளை கன்னடத்தில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் இன்ஜினியர்கள் ஆவதை இந்த அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.
ஏழைகளுக்காக உழைக்கும் எனது தலைமையிலான அரசு கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மருத்துவமனை மற்றும் தொழில் படிப்புகளை படிக்க வாய்ப்பு அளித்துள்ளது. ஏழைகளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல் நமது நாட்டில் நீண்ட காலமாக நிலைத்திருந்தது. அதை மாற்றிய பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.