பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை தனக்கு உரித்தாக்கிய தன்னிகரற்ற நம் பிரதமர் - 140 கோடி இந்தியருக்கும் கிடைத்த பெருமை!
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் மெக்ரான் வழங்கினார். அணிவகுப்பிலும் மோடி பங்கேற்றார்.
By : Karthiga
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரதமர் மோடி எலிசி அரண்மனைக்கு சென்றார். அவரை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் அதிபரும் அவருடைய மனைவி பிரிகிட்டியும் விருந்து அளித்தனர் .
பின்னர் எலிசிஅரண்மணையில் பிரதமர் மோடிக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் மற்றும் ராணுவ வீரராக கருதப்படும் 'கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்' என்ற விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் மெக்ரான் வழங்கினார். இந்த விருது கடந்த 1802 ஆம் ஆண்டு பிரான்சை ஆண்ட நெப்போலியன் போனபர்ட்டால் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சை சேர்ந்தவர்களுக்கே இந்த விருது உரியது. இருப்பினும் பிரான்சுக்கு சேவை செய்த வெளிநாட்டு தலைவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்து இளவரசராக இருந்த போது சார்லஸ், ஜெர்மன் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் புட்ரோஸ் கலி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். சமீப காலத்தில் எகிப்து, பிஜி, அமெரிக்கா , பூட்டான் மாலத்தீவு , ரஷ்யா நாடுகளின் உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். பிரான்சின் உயரிய விருது குறித்து அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மிகுந்த பணிவுடன் விருதை பெற்றுக் கொண்டேன். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த கௌரவம். அதிபருக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மீது அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பாசத்தை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் தேசிய தினத்தை ஒட்டி நேற்று பாரிஸ் நகரில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதிபர் மெக்ரானும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டனர்.
பாரம்பரிய அணிவகுப்பின் சிறப்புகளை மோடியிடம் விளக்கி கூறியபடி இருந்தார். இந்திய முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் கொண்ட குழுவும் அணி வகுப்பில் கம்பீரமாக நடைபோட்டது.அப்போது 'சாரே ஜஹான் சே அச்சா' என்ற பாடலின் இசை ஒலித்தது. இந்திய குழுவுக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார். வானில் பிரான்ஸ் ஜெட் விமானங்களுடன் சேர்ந்து இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்களும் சாகசம் நிகழ்த்தின.
SOURCE :DAILY THANTHI