சிதம்பரம் அதிரடி கைது - சுவர் ஏறி குதித்து தூக்கிய சி.பி.ஐ : மளமளவென குவிக்கப்படும் காவல்துறையினர்!
சிதம்பரம் அதிரடி கைது - சுவர் ஏறி குதித்து தூக்கிய சி.பி.ஐ : மளமளவென குவிக்கப்படும் காவல்துறையினர்!
By : Kathir Webdesk
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தில் அதிரடியாக நுழைந்த சிபிஐ, அமலாக்கதுறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.
மத்திய நிதி அமைச்சராக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை அவருடைய சொத்துகளை முடக்கியது. ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக ஐகோர்ட்டு அவ்வப்போது இடைக்கால தடை விதித்து வந்தது.
ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25-ந்தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில்கவுர் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதனையடுத்து அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனுதொடர்பாக இன்று விசாரணையில்லை என தெரியவந்தது. இந்நிலையில் சிபிஐயையும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின் பக்க வாசல் வழியாகவும் உள்ளே நுழைந்து கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.