ராகுல் காந்தி பிரதமராக பிரார்த்தனை செய்யும் பாகிஸ்தான் தலைவர்கள்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி இந்திய பிரதமராக வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
By : Karthiga
பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார். இதில் முக்கியமாக ராகுல் காந்தி இந்திய பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை நேற்று மீண்டும் அவர் கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பலமு பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
பாரதமாதாவை அவமதிப்பதை இனி பொறுத்துக் கொள்ள முடியாது. புதிய இந்தியாவின் துல்லிய தாக்குதலும் வான் தாக்குதலும் பாகிஸ்தானை உலுக்கியது .காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களை அந்த நாடு ஆதரித்து வந்தது. எதிரியின் பிராந்தியத்துக்குள் நுழைந்து எப்படி தாக்க வேண்டும் என்பது புதிய இந்தியாவுக்கு தெரியும். துல்லிய தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் இப்போது காங்கிரஸின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார்கள் .
அவர் பிரதமராக வேண்டும் என அண்டை நாடு வேண்டுமானால் விரும்பலாம். ஆனால் இந்தியாவோ ஒரு வலிமையான பிரதமரைக் கொண்ட வலிமையான நாட்டையே விரும்புகிறது. ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள். 500 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவிலை கட்டுவதற்கும் காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குவதற்கும் அதுதான் உதவியது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்றுவதற்கு எந்த வகையிலும் காங்கிரசை அனுமதிக்க மாட்டேன்.
முதல் மந்திரியாகவோ பிரதமராகவோ என் மீது கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித ஊழல் கறையும் இல்லை. எனக்கு சொந்தமாக ஒரு வீடோ சைக்கிளோ கூட இல்லை .ஆனால் ஊழல்வாதிகள் ஆன ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து உள்ளனர் .இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI