உக்ரைன் போருக்கு தீர்வு காண சமாதான முயற்சிக்கு உதவ தயார் பிரதமர் மோடி அறிவிப்பு !
உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிக்கு உதவ தயார் என்று இத்தாலி பிரதமர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மெலோனியை பிரதமர் மோடி கைக்குலுக்கி வரவேற்றார் . பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் மோடி ஜீயார்ஜியா மெலோனி இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் எரிசக்தி சுகாதாரம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜியார்ஜியா மெலோடி உடன் சேர்ந்து பிரதமர் மோடி நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
ரஷ்யா உக்கரைன் போரால் வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாங்கள் கவலை தெரிவித்தோம் .உணவு உரம் எரிபொருள் தட்டுப்பாட்டால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வளரும் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக எடுக்கப்பட வேண்டிய கூட்டு முயற்சிகளை வலியுறுத்தினோம். போரின் ஆரம்பத்திலிருந்து இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் தூதரகம் முயற்சி மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் என்று இந்தியா கூறி வருகிறது . அதற்காக எத்தகைய சமாதான முயற்சிக்கும் தனது பங்களிப்பை அளிக்க இந்தியா முற்றிலும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜியார்ஜியா மெலோனி நம்பிக்கை தெரிவித்தார் . இத்தாலி பிரதமர் மேலும் கூறியதாவது :- கடந்த ஆண்டு பிரதமர் ஆன பிறகு இந்த பிராந்தியத்துக்கு நான் வருவது இதுவே முதல்முறை ஜி - 20 தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா வுக்கு எங்கள் ஆதரவு உண்டு. பிரதமர் மோடியின் தர மதிப்பீடு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்களிடையே மிகவும் விரும்பப்படும் தலைவர்களில் ஒருவர் என்ற நிலையை அவர் எட்டி இருக்கிறார். அவர் மாபெரும் தலைவர் என்பது உண்மையிலேயே நிரூபணம் ஆகி உள்ளது. அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.