வாரணாசி தொகுதியில் 1,780 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் - கெத்து காட்டும் பிரதமர் மோடி!
தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ரூபாய் 1,780 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
By : Karthiga
பிரதமர் மோடி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். அந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் . 1780 கோடி மதிப்புள்ள 28 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் விழா நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதில் வாரணாசி கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கோடாலியா வரை 3.7 கி.மீ தூரத்துக்கு ரோப் கார் அமைக்கும் திட்டமும் அடங்கும்.
ரூபாய் 645 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் எளிதாக சென்று வர திட்டம் கொண்டுவரப்படுகிறது . கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின்கீழ் தினமும் 55 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இத்திட்டம் ரூபாய் 300 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 'கேலோ இந்தியா 'திட்டத்தின் கீழ் சிக்ரா ஸ்டேடியத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஜல்ஜீவன் திட்டத்தில் 19 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் 59 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :-
முன்பெல்லாம் உத்தர பிரதேசத்தை நம்பிக்கையில்லாமல் பார்த்தனர். ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியால் தற்போது நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கப்பட்டதால் செழுமை நிச்சயம். 9 ஆண்டுகளுக்கு முன்பு காசியில் எதுவுமே மாறாது என்று மக்கள் கருதினர். ஆனால் காசியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் விவாதிக்கின்றனர் .
கடந்த ஓராண்டில் 7 கோடி சுற்றுலா பயணிகள் காசிக்கு வந்துள்ளனர் . அதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் மேம்பாட்டு பணிகளை இந்தியா முழுவதும் பாராட்டுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் அங்கிருந்து புதிய ஆற்றலை எடுத்துச் செல்கிறார்கள். காசியில் பழமை புதுமை இரண்டையும் பார்க்க முடிகிறது. கங்கை நதியின் இருபுறமும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.