அரித்து எடுக்கப்படும் ஊடகங்கள் : இந்தியாவில் பிரிவினையை உண்டாக்கும் போலி செய்திகள் - துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சுளீர் கேள்விகள்!
அரித்து எடுக்கப்படும் ஊடகங்கள் : இந்தியாவில் பிரிவினையை உண்டாக்கும் போலி செய்திகள் - துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சுளீர் கேள்விகள்!
By : Kathir Webdesk
ஊடகங்கள் சொந்த கண்ணோட்டத்துடன் செய்திகளுக்கு சாயம் பூசக்கூடாது என்றும், பொதுத்தன்மை, நியாயம், துல்லியத் தன்மை ஆகியவற்றைப் பராமரிப்பது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, புதுதில்லியில் இன்று இந்திய பிரஸ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செய்தி நிறுவனங்களின் நடுநிலைமையும், புனிதமும் எல்லா காலங்களிலும் காக்கப்பட வேண்டும் என்றார்.
தற்காலத்தில் முன்வந்துள்ள போலிச் செய்திகள் என்ற தன்மை மிகவும் மோசமாகியுள்ளது என்றும், சமூக ஊடகம் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். பரபரப்பாக்குவது, ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவது, பணத்திற்கு செய்தி வெளியிடுவது என்பவை தற்கால ஊடகங்களை பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வணிகக் குழுமங்களும், அரசியல் கட்சிகளும் செய்தித் தாள்களையும், தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்துவது, அவர்களின் சொந்த நலன்களை அதிகரிப்பதற்காக என்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார். இதனால் பத்திரிகைத் துறையின் மைய மாண்புகள் அரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
சுதந்திரமும், பொறுப்பும் தனித்தனியானவை என்று கருத முடியாது என குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்பாக மட்டும் ஊடகம் கருதப்படாமல் அடித்தள மக்களின் உண்மையான சேவகனாகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பத்திரிகையாளர்களுக்கான நடத்தை விதிகளைப் பத்திரிகையாளர் அமைப்புகளே உருவாக்கும் காலம் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாய்மை ஒருபோதும் சமரசம் செய்யப்படாததை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இணைய தளமும், செல்பேசியும் தகவல் கிடைப்பதை ஜனநாயகப்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், பல நேரங்களில் பொய்யான தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. நமது பன்முக சமூகத்தில் பிரிவினைகளையும், வெறுப்பையும் உருவாக்க முயற்சிக்கும் இத்தகைய செய்திகளுக்கு எதிராக, பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
வேளாண்மை போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, வளர்ச்சித்திட்டங்களுக்கு அதிக இடத்தை ஊடகங்கள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.