இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாட்டில் யு.பி.ஐ: பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
இலங்கை மற்றும் மோரிஷியஸ் நாட்டில் இந்தியாவின் யு.பி.ஐ பண பரிவர்த்தனை சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
By : Karthiga
இந்தியாவின் யு.பி.ஐ மூலம் பணப்பதிவர்த்தனை செய்யும் சேவைகள் இலங்கை மற்றும் மொரீஷியஸ் தீவில் பன்னிரண்டாம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு யு.பி.ஐ பண பரிவர்த்தனை சேவையை தொடங்கி வைத்தார். இதில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் , இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். விழாவில் இந்தியாவின் ரூபாய் அட்டை சேவைகளும் மொரிசியஸ் தீவில் தொடங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
இந்திய பெருங்கடல் பகுதியில் 3 நட்பு நாடுகளுக்கு இது ஒரு சிறப்பு நாள் ஏனெனில் நாங்கள் வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கிறோம். யு.பி.ஐ சேவையால் இலங்கை மற்றும் மொரீஷியஸ் பயனடையும் என்று நான் நம்புகிறேன். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை பேரழிவாக இருந்தாலும் சுகாதாரம் தொடர்பானதாக இருந்தாலும் உலக அரங்கில் இந்தியா தான் முதல் ஆதரவு கரம் நீட்டும். அது தொடரும். யுபிஐ சேவை தொடங்கியதன் மூலம் இலங்கை மற்றும் மொரீஷியசுக்கு வரும் இந்தியர்களும் பயனடைவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
SOURCE :DAILY THANTHI