7000 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி - குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
7000 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
By : Karthiga
இந்தியாவில் கௌரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.முதலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35 வது தேசிய விளையாட்டு 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கால வரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டியை நடத்த போதிய வசதியின்றி கோவா ஒதுங்கியது. இந்த நிலையில் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா ராஜ்கோட், பவநகர் நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடக்கிறது.
ஏழாண்டு இடைவெளிக்கு பிறகு இந்த விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது. குஜராத் மாநிலம் இந்த போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு கண் கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,ஹாக்கி, கைப்பந்து உட்பட 36 விளையாட்டுகளில் இரு பாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 7,000 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள். தேசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
உலக டேபிள் டென்னிஸ் போட்டி இந்த சமயத்தில் நடக்க இருப்பதால் தனியாக முன்கூட்டியே நடத்தப்பட்டது. கபடி, ரபக்பி, நெட் பால், லான் பவுல்ஸ் ஆகிய போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.சைக்கிளிங் பந்தயம் மட்டும் டெல்லியில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.