இந்தியா முழுவதும் தரமான கல்வியை வழங்குவதே பிரதமர் மோடியின் இலக்கு- அண்ணாமலை!
இந்தியா முழுவதும் தரமான கல்வியை வழங்கி இந்தியாவை தரம் உயர்த்துவதே மோடியின் இலக்கு என்று தமிழக பா ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
By : Karthiga
பா ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் வாழப்பாடி அருகே பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இருந்து நடை பயணமாக பேரூர் பழைய பஸ் நிலையம் வரை சென்றார். பேரூர் பழைய பஸ் நிலையம் அருகே திறந்தவேனில் நின்றபடி அவர் பேசியதாவது :-
திருச்சிக்கு வந்த பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூபாய் 20000. கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். ரூ.1,100 கோடி செலவில் விமான நிலையத்தை திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்திற்கு மேட்டூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் . தமிழகத்திற்கு ரயில்வே துறை மூன்று மடங்கு கூடுதலாக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி எடுத்துச் செல்கிறார் . பா ஜனதா ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை. கல்வராயன் மலை, சேர்வராயன் மலைப்பகுதி கிராமங்களில் இதுவரை சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தி.மு.கவினரிடம் சமூக நீதி என்பது வார்த்தை அளவில்தான் உள்ளது. பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக உயர்த்தியவர் பிரதமர் மோடி .இதுதான் உண்மையான சமூக நீதி.
நாட்டில் பழங்குடியின மக்கள் வசிக்கும் தொகுதிகளில் 85 சதவீதம் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. சதீஷ்காரில் 53 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை பிரதமர் மோடி முதல் அமைச்சராக்கி உள்ளார். இதுதான் சமூக நீதி.தமிழ்நாட்டில் 35 அமைச்சர்களில் பழங்குடியின பட்டியல் இனத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே அமைச்சராக உள்ளனர். தமிழகத்தில் ஆறு இடங்களில் மட்டுமே மத்திய அரசின் பழங்குடியினர் நல ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி தருவதில்லை. அரசு பள்ளிகளை கவனிக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக பணி செய்கிறார். இந்தியா முழுவதும் தரமான கல்வியை வழங்குவதே பிரதமர் மோடியின் இலக்காகும். கடந்த ஆண்டு ₹7 இலட்சத்து 20,000 கோடி தமிழகத்திற்கு கடன் இருந்தது. தற்போது ரூபாய் 8 லட்சத்து 34,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கடனை கட்டி முடிக்க 87 ஆண்டுகள் ஆகும். கடன் வாங்குவதில் தமிழக முதல் இடம் என்பதை மு .க .ஸ்டாலின் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI