பிரதமர் மோடியின் சீரிய நடவடிக்கைகளால் உலகின் மதிப்புமிக்க நாடக இந்தியா உயர்ந்துள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியின் சீரிய நடவடிக்கையால் உலகின் மதிப்புமிக்க நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று கோவையில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர். என்.ரவி பேசினார்.
By : Karthiga
கோவை அருகே திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மகாத்மா காந்தி நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவின் வருங்காலம் இளைய தலைமுறையினரின் கையில் உள்ளது. போட்டி நிறைந்த இன்றைய உலகில் எந்த விதத்திலும் யாரும் பின்தங்கி இருக்கக் கூடாது. எனவே இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப அறிவிலும், கல்வியிலும் முன்னணியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தில் ஆதிக்கத்திற்கு பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்திய ஆங்கிலேயர்களின் கல்வி முறையை பின்பற்றி வந்தது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு முன்பு 1960 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை முந்தைய கல்வி முறையில் சிறிதளவு மாற்றங்களை கொண்டு வந்ததே தவிர மிகப் பெரிய முன்னேற்றத்தை தரவில்லை.
சமீபத்திய காலமாகத்தான் சர்வதேச அரங்கில் இந்தியா முக்கிய நாடக கருதப்படுகிறது எழுந்து நமது பெருமையையும் தன்னம்பிக்கையையும் மரியாதையையும் கல்வியறிவையும் மீட்டு வருகிறது ஜி 20 மாநாட்டினை இந்தியா தலைமை தாங்கி நடத்துவது இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில் இந்தியா உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முன்னெடுப்புகள்தான். இந்தியாவிற்கான இலக்கை சரியாக நிர்ணயித்து அதனை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி செலுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியா உலகின் மிக மதிப்புமிக்க நாடாக உயர்ந்து வருகிறது.
உலக நாடுகளின் தலைமையாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 25 ஆண்டுகளில் 2047 இல் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை வகிக்கும் அளவுக்கு உயரும். தற்போது நடைபெறும் ஜி- 20 மாநாட்டில் சர்வதேச அரங்கில் இந்தியா வளர்ச்சிக்கான வழிகாட்டும் என பிற நாடுகள் எதிர்பார்க்கின்றன. சர்வதேச வளர்ச்சிக்கான பாதையை இந்தியா வகுக்க உள்ளது. நமது தொழில்நுட்ப பொருளாதாரத்தை ஒருங்கிணைத்து உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா முன்னேறி செல்கிறது.
தமிழ்நாடு இந்திய அளவில் வளர்ந்த மாநிலமாகவே உள்ளது. இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு , கிழக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் சரி சமநிலை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு, திரிபுரா என எந்த மாநில பேதமும் இன்றி மருத்துவம், கல்வி, மின்சாரம்,எரிசக்தி என அனைவருக்கும் அனைத்தும் வழங்கப்படுகிறது. மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் பிரிந்து இருந்தாலும் அரசியல் கட்சியினர் லாபம் அடைந்தனர். இதனால் தேசம் பின்னோக்கி சென்றது.தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது . தமிழ்நாடு கலாச்சாரங்களை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இங்கு பிரசித்தி பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. நாட்டின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.